தமிழகம் முழுவதும் 12 இடங்களில் என்ஐஏ சோதனை - இருவர் கைது
தமிழகம் முழுவதும் என்ஐஏ நடத்திய தேடுதல் வேட்டையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ஐஏ
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று (30.06.2024) அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக 85 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
குறிப்பாக, 'ஹிஸ்புத் தஹ்ரீர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கைது
இந்நிலையில் தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் காதர் சுல்தான் என்பவரின் மகனான புகைப்பட நிபுணர் அகமது (35) வீட்டிலும், மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் மகன் சலீம் வீட்டிலும், சாலியமங்கலத்தில் உள்ள அப்துல் காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பின் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் முடிவில் தஞ்சாவூரை சேர்ந்த அப்துர் ரகுமான் மற்றும் முஜிபுர் ரகுமான் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீறில் உறுப்பினர்களாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
NIA Arrests 2 Accused after Extensive Searches in TN in Hiz-ut-Tahrir Case pic.twitter.com/LNK2EeEqZ9
— NIA India (@NIA_India) June 30, 2024
மேலும் இளைஞர்களிடம் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளை ரகசிய வகுப்புகள் நடத்தி மூளை சலவை செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் இவர்களிடமிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப், புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.