கவுண்ட் டவுன் ஸ்டார்ட்; எரியும் சூரியனை நோக்கி பயணம் - அடுத்த டார்க்கெட் ஆதித்யா எல்1
சூரியனை ஆராய்வதற்கு ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை இஸ்ரோ அனுப்புகிறது.
ஆதித்யா எல்1
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில், ஆதித்யா எல்1 திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும்.
அடுத்த டார்க்கெட்
சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளி வரும் காந்த புயல்தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.
இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான். தற்போது இந்த ராக்கெட் சதீஷ் தவான் ஏவுதளத்தில் ஏவுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. இது நாளை காலை திட்டமிட்டபடி 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும்.
சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து இந்த ஆதித்யா எல்1 விண்கலம் ஆய்வு செய்யும்.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.