நிலவுக்கு அடுத்து சூரியன்; விண்வெளியில் மாஸ் காட்டும் ISRO - ஆதித்யா-எல்1 தயார்!
ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு வந்தடைந்துள்ளது.
இஸ்ரோ (ISRO)
கடந்த ஜூலை 14ம் தேதி நிலவை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO). அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சந்திரயான் 3 மிஷன் நிலவை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு காட்சிகளை இரண்டுமுறை படம்பிடித்து அனுப்பியது. வரும் 23ம் தேதி நிலவில் விண்கலம் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்1
இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 என்ற செயகைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது இஸ்ரோ . பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு செயற்கைகோள் வந்தடைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாத இறுதியில் பிஎச்செல்வி சி57 ராக்கெட் மூலம் செயகைக்கோளை விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைகோள் மூலம் சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறியவும், சூரியனை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும், சூரியனை தொடர்ந்து கண்காணிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.