நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - ஒரே இன்னிங்சில் 2 மோசமான சாதனை படைத்த இந்திய அணி
ஒரே இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணி 2 மோசமான சாதனைகளை படைத்துள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
5 டக் அவுட்
இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலாவது இறங்கிய 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் டக் அவுட் ஆகினர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 13 ரன்களும் எடுத்துள்ளனர்.
31.2 ஓவரில் 46 ரன்கள் குவித்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் குவித்தது.
இந்த இன்னிங்சில் இந்திய அணி 2 மோசமான சாதனைகளை படைத்துள்ளது. இதற்கு முன்பு முதல் 8 பேட்ஸ்மேன்களில் 4 பேர் டக் அவுட் ஆகியிருந்தார்கள். இந்த இன்னிங்ஸில் இந்திய அணி அந்த சாதனையை தகர்த்துள்ளது.
சொந்த மண்ணில் குறைந்த ரன்
இதே போல் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி அடித்த 3 வது குறைந்த பட்ச ரன்களாகும். 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் இந்த 2 போட்டிகளும் இந்தியாவுக்கு வெளியில் நடந்தது.
சொந்த மண்ணில், 1987 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெல்லியில் நடந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்ததே இந்தியா அணியின் குறைந்த பட்ச ரன்களாக இருந்தது. தற்போது 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அந்த சாதனையை தகர்த்துள்ளது.