வருமான வரி கட்டுறீங்களா? இனி இமெயில், சோசியல் மீடியா கணக்குகளை அதிகாரிகள் ஆராயலாம்!
தனிநபர்களின் கணினிகளை அணுக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை
வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, வருமான வரி தொடர்பான விசாரணைகளின் போது தனிநபரின் மின்னஞ்சல்கள், வர்த்தக கணக்குகள், சமூக ஊடக சுயவிவரங்கள் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி ஆராய அனுமதிக்கிறது.
பிரிவு 247-ன் படி, வருமான வரித் துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு அல்லது வரி செலுத்தப்படாத, வெளியிடப்படாத சொத்துக்கள் இருப்பதாக சந்தேகித்தால், ஏப்ரல் 1, 2026 முதல் சம்பந்தப்பட்டவரின் மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், வங்கி விவரங்கள் மற்றும் முதலீட்டு கணக்குகளை அணுக உரிமை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய விதிகள்
மேலும், புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது.
வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்கும் 12 மாதங்களை குறிக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி நிர்வாக விதிகளை நிறுவவும், இணக்கமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை அடிக்கடி சட்ட மாற்றங்கள் தேவையின்றி செயல்படுத்தவும் அனுமதிக்கும்.
தற்போதைய விதிகளின்படி, ஒரு தனிநபரிடம் விசாரணை நடத்தும்போது, வருமான வரித் துறை அதிகாரிகள் அவரது லேப்டாப், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதள கணக்குகள் உள்ளிட்டவற்றை அணுக அவரிடம் அனுமதி கேட்பது அவசியம். அவர் அனுமதிக்கவில்லையென்றால் அதிகாரிகளால் உடனடியாக அவற்றை அணுக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.