தேர்தல் ஆணையர் ராஜினாமா; பின்னணி என்ன? பிரதமர் தலைமையில் தேர்வுக்குழு!
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
அருண் கோயல் ராஜினாமா
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இதில், அனூப் சந்திர பாண்டே ஓய்வு பெற்ற நிலையில், அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்தார். இச்சம்பவம் பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கிடையில், தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும், அருண் கோயலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
தேர்வுக்குழு
சமீபத்தில் இருவரும் மேற்கு வங்கத்துக்கு சென்றிருந்தனர். தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பை அருண் கோயல் புறக்கணித்தார். தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ம் தேதி டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பையும் புறக்கணித்தார்.
இந்நிலையில், புதிய 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வரும் 15-ம் தேதி டெல்லியில் கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தும்.
இக்கூட்டத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் இறுதி செய்யப்படுவார்கள். பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் திரெளபதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.