மக்களே எச்சரிக்கை; புதிய வகை கொரோனா தொற்று பரவல் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
புதிய கொரோனா
2019இல் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த நாடுகளையும் உலுக்கி எடுத்தது. அதிலிருந்து மீளவே வருடங்கள் ஆனது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது.
இதன் காரணமாக அந்த நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதனால் இத்தகைய கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த புது வகை கொரோனா இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பரவி இருப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு கொரோனா வைரஸ் அலை வருவதற்கு வாய்ப்புள்ளது.
முக்கிய அறிவிப்பு
ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பரவவில்லை எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என செல்வவிநாயகம் கூறியுள்ளார். மேலும் இந்த வைரஸ், ஒமைக்ரானின் மற்றொரு வகைதான். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டாலும் நோயாளி, விரைவில் குணமடைவார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள்,
இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் இந்த வகை வைரஸ் பாதிப்புகளை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு தமிழ்நாட்டில் ஏற்கனவே சுகாதாரத்துறையிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.