ரவுடியிசம் ஒழிக்க ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்..காவல் ஆணையர் அருண்!
சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுளார்.
ரவுடியிசம் ஒழிக்க..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையில் சட்டம் – ஒழுங்கு குறித்து விவாதங்களை எழுப்பிய நிலையில், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்தது.
தற்போது அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “சென்னை மாநகரத்துக்கு காவல் ஆணையராக பொறுப்பேற்று இருக்கிறேன்.
இந்த மாநகரம் எனக்கு புதிததல்ல. சென்னையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளேன். எனவே, சென்னை மாநகரம் எனக்கு புதிதல்ல. அதேநேரம், சென்னை மாநகரில் உள்ள சில பிரச்சினைகள், குறிப்பாக சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கக் கூடிய சில சிக்கல்களைக் களைவது,
ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்தைக் கட்டுப்படுவது, காவல் துறையில் இருக்கக் கூடிய ஊழல் செயல்பாடுகளை அகற்றுவது ஆகியவற்றுக்கு நான் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்.காவல் துறையில் பல்வேறு பதவிகள் இருக்கின்றன. அதில், சென்னை மாநகர ஆணையர் பதவி முக்கியமானது.
காவல் ஆணையர் அருண்
சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று எதை வைத்து சொல்லப்படுகிறது. அடிப்படையில், ஏதாவது ஒரு புள்ளி விவரம் இருக்க வேண்டும் இல்லையா? காலங்காலமாக குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை நாங்கள் தடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். முன்பு குறைவாக இருந்தது,
இப்போது அதிகமாகி விட்டது என்றால், அதை புள்ளி விவரங்களை வைத்துதான் கூற முடியும். அப்படி, புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, சென்னை மற்றும் தமிழகத்தில் 2022, 2023-ஆம் ஆண்டுகளில் கொலைகள் குறைவான எண்ணிக்கையிலேயே நடந்துள்ளது.
இருந்தாலும், குற்ற நடவடிக்கைகள் மற்றும் ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.காவல் அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து தங்களது பணிகளை மேற்கொண்டாலே, குற்றங்கள் குறையும். நான் தற்போதுதான் பொறுப்பேற்று இருப்பதால், ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நான் பதில் கூற முடியாது” என்று கூறியுள்ளார்.