பாகிஸ்தான் எல்லை..விமான தளம் அமைக்கும் இந்தியா - சூசகம் என்ன..
பாகிஸ்தான் எல்லை பகுதியில், இந்தியா நவீன விமான தளத்தை அமைக்க உள்ளது.
விமான தளம்
குஜராத்தில் உள்ள தீசாவில் அமையவுள்ள விமான தளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த புதிய விமான தளம் அமைக்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் விமானப்படையின் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும்.

இதுகுறித்து பேசியை பிரதமர் மோடி, இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் முதல் ராணுவ கண்காட்சி இதுவாகும். வடக்கு குஜராத்தில் இருக்கும் தீசாவில் உள்ள புதிய விமானப்படை தளம் நாட்டின் பாதுகாப்பிற்கான சிறந்த மையமாக உருவாகும். இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி
இறக்குமதி செய்ய முடியாத மேலும் 101 பொருட்களின் பட்டியலை பாதுகாப்பு படைகள் வெளியிடும். இதன் மூலம் 411 பாதுகாப்பு தொடர்பான பொருட்களை உள்நாட்டில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். இது இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றார். இந்த விமான தளம் 4519 ஏக்கரில் கட்டப்படுகிறது.

இந்த நிலம் ஏற்கனவே விமானப்படையிடம் இருந்தது. தற்போது அங்கு 20 கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. அதே சமயம் 22 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரும் கட்டப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் தற்போது மொத்தம் 1645 போர் விமானங்கள் உள்ளன. மேலும், இது பாகிஸ்தான் மீது எந்த ஒரு சிறப்பான விளைவையும் ஏற்படுத்தாது.
தற்காப்பு தளம்
பாகிஸ்தான் இப்போதுள்ள தனது ராணுவ விமான தளங்களை மேம்படுத்தக்கூடும் அல்லது விரிவுபடுத்தக்கூடும். டீசாவின் ராணுவ விமான தளம், தாக்குதல் தளமாக இருக்காது, தற்காப்பு தளமாக இருக்கும். இங்கு மிக்-29 மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் இலகு ரக தேஜஸ் விமானங்கள் அணியாக நிறுத்தப்படும்.
இந்தியாவின் முக்கிய தாக்குதல் விமானங்கள், ராஜஸ்தானின் ஜோத்பூர் ராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டுளன. அங்கிருந்து இந்த தளத்திற்கு வந்துசேர ஐந்து முதல் ஆறு நிமிடங்களே ஆகும். டீசா தளம் கட்டுவதற்கு முக்கிய காரணம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பாதுகாப்பு ஆகும்.
இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும். இது தாக்குதலுக்கு உள்ளானால், இந்தியா பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுவிடும். அதன் பாதுகாப்பிற்கு இந்த தளம் முக்கியமானது என ராகுல் பேடி தெரிவித்துள்ளார்.