தமிழ்நாட்டில் புதிதாக உதயமாகும் 4 மாநகராட்சி - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாட்டில் புதிதாக தரம் உயர்த்தப்படும் 4 மாநகராட்சிகளை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மாநகராட்சி
தமிழ்நாட்டில் தற்போது 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்தப்படும். தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. தரம் உயர்த்தப்படுவதன் மூலம் அப்ந்த பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும்.
மு.க.ஸ்டாலின்
இதன்படி நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு நகர்புற உள்ளாட்சி சட்டத்தில் இருந்த வருமான மற்றும் மக்கள் தொகை வரம்பு தடையாக இருந்தது. இதனால் அந்த சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து ஆளுநர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
தற்போது இந்த 4 நகராட்சிகளில் பல்வேறு கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இந்த நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.