கல்யாணம் முடிந்து மறுவீட்டுக்கு வந்த மருமகனை வெட்டி கொலை செய்த மாமனார்..!

Tamil nadu Tamil Nadu Police Marriage
By Thahir Jun 18, 2022 10:56 PM GMT
Report

திருத்துறைப்பூண்டி அருகே திருமணமாகி 4 நாட்களில் மணமகனை வெட்டி படுகொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்களாந்தி மங்களநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தரசன் (27). அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிச்சந்திரன் மகள் அரவிந்தியா (27) இவர்கள் இருவருக்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில் மகள் மற்றும் மருமகனை ரவிச்சந்திரன் நேற்று 17ம் தேதி மறு வீடு அழைப்புக்கு அழைத்து வந்து விருந்து வைத்துள்ளார்.

கல்யாணம் முடிந்து மறுவீட்டுக்கு வந்த மருமகனை வெட்டி கொலை செய்த மாமனார்..! | Nephew Hacked To Death

கொலையில் முடிந்த தகராறு

அப்போது, முத்தரசன் மதுபோதையில் தனது மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அரவிந்தியா-வை முத்தரசன் அடித்துள்ளார்.

இதனை ரவிச்சந்திரன் தட்டிக் கேட்டுள்ளார். இதன் காரணமாக மாமனாருக்கும், மருமகனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, இதில் மாமனார் ரவிச்சந்திரனை மருமகன் முத்தரசன் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற ரவிச்சந்திரன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து முத்தரசனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முத்தரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை 

இதனையடுத்து ரவிச்சந்திரன், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் தன் மருமகனை கொலை செய்ததாக கூறி சரணடைந்துள்ளார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், முத்தரசன் அரவிந்தியாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

காதலிக்கும் போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அரவிந்தியாவை முத்தரசன் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்த வழக்கும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், முத்தரசனின் வற்புறுத்தல் காரணமாக அரவிந்தியாவை ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலியை அடிக்கச் சென்ற பெண் இரும்பு கேட்டில் மோதி உயிரிழப்பு..!