குடிமகன்களுக்கு செக் : திருவாரூர் எஸ்.பி. எச்சரிக்கை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பு படி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அரசு மதுபான கடைகள் செயல்படக் கூடாது என உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது
. மேலும் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகாமையிலும் மதுபான கடைகள் செயல்படக் கூடாது என உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பல மாநில நெடுஞ்சாலைகளில் அரசு மதுபானக்கடைகள் இதுவரை செயல்பட்டு வருகின்றன.
இதற்கு பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட எஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தெரிவித்துள்ளார்.
திருவாரூர்-9498110861, நன்னிலம்-9498143926, மன்னார்குடி- 9498183264, திருத்துறைப்பூண்டி- 9445407674, முத்துப்பேட்டை- 9840717894, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை- 9498181220 என்ற தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் வந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவும், மேலும் தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விலாசம் கண்டிப்பாக ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.