நீட் முறைக்கேடு: எரிந்த நிலையில் வினாத்தாள்கள், சிக்கிய காசோலைகள் - திடுக் தகவல்
நீட் தேர்வு வினாத்தாள் கசியவிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாகின.
தொடர்ந்து, இந்த முறை 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது, 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என பல சர்ச்சைகள் வெடித்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில், கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கு மேல் கைமாறியுள்ளது.
திடுக்கிடும் தகவல்
மேலும், தீவிர விசாரணையில் சுமார் 35 மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக்கு முன்தினம் வினாத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அவர்கள் அனைவரும் பாட்னாவில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வாடகை இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்து தலா ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பாதுகாப்பு அறையில் பாதி எரிந்த நிலையில் வினாத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் 4 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உள்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.