நீட் தேர்வு - மாணவிகளின் உள்ளாடையை கழட்டச் சொன்ன கொடுமை!
கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் உலோகக் கொக்கி கொண்ட உள்ளாடைகள் அணிந்திருந்ததாக, அவற்றைக் கழட்டச் சொன்ன விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது.
கடுமையான நெறிமுறை
தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள். அதே போன்று, மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள்.
மேலும், பெண் தேர்வர்களை சோதனைகள் மேற்கொள்வதில் ஏற்படும் உணர்ச்சி சிக்கலை அறிந்து, விரிவான அறிவுரைகள் தேர்வு மையத்தில் சோதனையில் ஈடுபடும் பெண் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
மோசமான அணுகுமுறை
இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டம், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியுள்ளனர்.
தேர்வுக்கு முன்பாக தேர்வரின் மேல் உள்ளாடையை கழட்ட நிரபந்தித்துள்ளனர். கட்டாய சோதனை என்ற பெயரில் பாதிக்கப்பட்டவரின் நேர்மையையை, கண்ணியத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
புகார்
தேர்வை எழுதுவதற்கு முன்பாகவே உள ரீதியான, உணர்வு ரீதியான பிரச்னை கொடுக்கப்பட்டதாகவும், மன அதிர்வுகளை உணர்ந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும்,
இந்த குற்றச்சாட்டை கல்லூரி நிர்வாகம் ஏற்க மருத்துளளது. கட்டாய சோதனையில் தங்கள் கல்லூரி நிர்வாகம் ஈடுபடவில்லை என்றும், வெளி நிறுவனங்கள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
இது, பாலியல் ரீதியான பாகுபாட்டின் தீவிர வடிவம் என்றும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.