நாட்டையே உலுக்கிய கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு ; பிஷப் ஃபிராங்கோ விடுவிப்பு

kerala acquitted bishop franko from sexual abuse case kottayam
By Swetha Subash Jan 14, 2022 10:50 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் ஃபிராங்கோ முளய்க்கல். கோட்டயம் குருவிலங்காடு மடத்தில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ம் ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறினார்.

பிஷப் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டும் முதலில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கன்னியாஸ்திரிகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பிஷப் ஃபிராங்கோ முளய்க்கல் 2018 செப்டம்பர் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பிஷப் ஃபிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர், 2018 அக்டோபரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

மேலும் அனுபமா உள்ளிட்ட கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. 2018, 2019-ம் ஆண்டுகளில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் 105 நாள் ரகசிய விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பை கேட்பதற்காக பிஷப் ஃபிராங்கோ முளய்க்கல் காலை 9 மணிக்கு பின்வாசல் வழியாக கோர்ட்டுக்கு வந்தார். ஃபிராங்கோ முளய்க்கலுடன் அவரது சகோதரனும், சகோதரியின் கணவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

தீர்ப்பு கூறுவதைத் தொடர்ந்து கோர்ட் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாரத்தை பயன்படுத்தி பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் பிஷப் மீது வழக்குப்பதியப்பட்டிருந்தது.

இன்று காலை நீதிபதி ஜி.கோபகுமார் அளித்த தீர்ப்பில், கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பிஷப் ஃபிராங்கோ முளய்க்கலை விடுவிப்பதாகவும். பிஷப் குற்றம் செய்ததாக தெளிவுபடுத்துவதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாகவும் கூறினார்.

தீர்ப்பு வெளியான பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பிஷப் ஃபிராங்கோ முளய்க்கல் அழுதபடியே தனக்காக வாதாடிய வழக்கறிஞரை கட்டிப்பிடித்தார்.

அப்போது பிஷப் ஃபிராங்கோ முளய்க்கலிடம் தீர்ப்பு பற்றி கேட்டதற்கு, "தெய்வத்திற்கு ஸ்துதி" என்று மட்டும் கூறிவிட்டு கைகூப்பியபடி காரில் புறப்பட்டுச் சென்றார்.

தீர்ப்பு ஆச்சரியம் அளிப்பதாகவும் தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்ததும் மேல்முறையீடு செய்ய போவதாகவும் விசாரணை அதிகாரி ஹரி சங்கர் தெரிவித்தார்.

இதற்கிடையே ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் தீர்ப்பை வரவேற்பதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியதோடு பிஷப் மாளிகையில் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் பிஷப் ஃபிராங்கோ முளைக்கல் ஏற்கனவே கைது செய்யப்பட்டு 25 நாட்கள் சிறை சென்ற பின் ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.