தவறான முடிவில்லை - என்னை 5 வருடத்திற்கு தேடாதீங்க - நீட் தேர்வு மாணவன் மாயம்
5 வருடங்களுக்கு தன்னை தேட வேண்டாம் என நீட் தேர்வு எழுதிய மாணவர் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாயமாகியுள்ளார்.
நீட் தேர்வு
நாட்டில் மருத்துவ கல்வியில் சேர்க்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் இருக்கின்றது. சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் முக்கிய இடத்தில் நீட் தேர்வு விலக்கு இடம் பெற்றிருந்தது.
இந்த சூழலில், நாடெங்கிலும் பல நீட் தேர்வு மையங்கள் முளைத்து விட்டன. மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்களும் அவற்றில் சேர்ந்து தங்களது கல்வியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் நீட் நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாயம்
இங்கு அதிகளவில் தற்போது மரணங்கள் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. ராஜஸ்தானின் கங்காபூரை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மீனா என்ற மாணவர் நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி மையத்தில் 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வையும் அவர் எழுதியுள்ளார். ஆனால், தேர்வு எழுதிய மறுநாளே அதாவது 6 -ஆம் தேதி ராஜேந்திர பிரசாத் மீனாவை காணவில்லை.
விடுதி உரிமையாளரிடம் வீட்டுக்கு செல்வதாக கூறி, பெற்றோருக்கு மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை. 5 வருடங்களுக்கு தன்னை தேடவோ தொடர்பு கொள்ளவோ வேண்டாம். எந்த தவறான முடிவையும் எடுக்க மாட்டேன் என குறுந்செய்தி அனுப்பியுள்ளார்.
அன்று முதல் காணாமல் போன அவரை போலீசார் பெற்றோர் அளித்த வழக்கின் பேரில் தேடி வருகிறார்கள்.