எங்களை மன்னிச்சுடுங்க... - திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு விக்னேஷ் கடிதம்
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
செருப்பு அணிந்த சர்ச்சை
திருமணம் முடிந்து மறுநாள் (10ம் தேதி) திருப்பதியில் நயன்தாரா மஞ்சள் நிற புடவையிலும், விக்னேஷ்சிவன் பட்டு வேஷ்டி, பட்டுசட்டையிலும் கோவிலுக்கு சென்றனர். திருப்பதியில் இவர்கள் வந்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. திருப்பதிக்கு வந்திருந்த பக்தர்களில் சிலர் இந்த தம்பதியினரை பார்க்க குவிந்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, திருப்பதி மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. பலரும் இது தொடர்பான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய தொடங்கினர்.
மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருப்பதிக்கு சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்தோம் மேலும் தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை. இதனால் புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என விக்னேஷ் சிவன் கூறினார்.
தேவஸ்தான அதிகாரிகள்
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் பேசுகையில், ''முக்கிய பிரமுகர்கள் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். தேவஸ்தானம் சார்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் அளிக்கும் பதிலை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் மன்னிப்பு கடிதம்
மன்னிப்பு கேட்டு திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி கோவிலுக்குதான் நாங்கள் வந்தோம். ஏழுமலையானின் திருமண நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டோம். அதன் பிறகு கோவிலுக்கு வெளியே வந்தபோது மக்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். அதனால் அங்கிருந்து கிளம்பிச் சென்றோம்.
சிறிது நேரம் கழித்து ஏழுமலையான் கோவிலுக்கு முன்பு வந்தோம். சீக்கிரமாக போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தோம். இல்லை என்றால் ரசிகர்கள் மீண்டு வந்து சூழ்ந்து கொள்வார்கள்.
அந்த அவசரத்தில் கோவில் வளாகத்தில் காலணிகளுடன் நடந்ததை கவனிக்கத் தவறிவிட்டோம். அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடந்த மாதம் 5 முறை திருப்பதிக்கு வந்தோம். ஆனால் பல காரணங்களால் திருப்பதி கோவிலில் வைத்து எங்களின் திருமணத்தை நடத்த முடியவில்லை.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.