ரூ.91 லட்சத்திற்கு குடியுரிமையை விற்கும் நாடு - என்ன காரணம் தெரியுமா?
நாடொன்று குடியுரிமையை ரூ.91.38 லட்சத்திற்கு விற்கிறது.
நவ்ரூ
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் எட்டு சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு நவ்ரூ. உலகின் மிகவும் மோசமாக காலநிலை பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இங்கு 12,500 பேர் வசிக்கின்றனர். இந்த மக்கள்தொகையில் 90 சதவீதத்தை உயர்ந்த நிலங்களுக்கு மாற்றுவதற்கும், புதிய சமூகத்தை உருவாக்குவதற்கும் தேவைப்படும் நிதிக்காக தங்கள் நாட்டின் குடியுரிமையை விற்க அரசு முடிவு செய்துள்ளது.
குடியுரிமை விற்பனை
கடற்கரையில் வசிக்கும் பலர் நிலத்தை ஏற்கனவே இழந்துவிட்டனர். சிலரது வீடுகள் பெரும் அலைகளில் முழுவதும் மூழ்கிப்போனது. இதுபோன்ற திட்டங்கள் மக்கள் "உலகளாவிய வாழ்க்கையை" வாழ அனுமதிப்பதாக கூறுகின்றனர். அதிக கட்டுப்பாடுகள் கொண்ட பாஸ்போர்ட்டுகளைக் கொண்டவர்களுக்கு இது பயனளிக்கும்.
நவ்ரூ தீவின் பாஸ்போர்ட் இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் முதல் ஆண்டில் $5.6 மில்லியன் ஈட்ட முடியும் என நவ்ரூ அரசு எதிர்பார்க்கின்றது. மொத்த அரசாங்க வருவாயில் 19% பங்களிப்பதே இதன் இலக்காக கொண்டுள்ளது.
முன்னதாக 1990-களின் நடுப்பகுதியில், இதுபோன்று செயல்படுத்தப்பட்ட திட்டம் ஊழலால் பாதிக்கப்பட்டது. முக்கியமாக 2003-ம் ஆண்டு மலேசியாவில் நவ்ரூ பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.