கடலூரில் ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி 7 பேர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

Narendra Modi
By Nandhini Jun 06, 2022 05:28 AM GMT
Report

கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் ஆற்றுத் தடுப்பணை

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது.

இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. நேற்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.

7 பேர் உயிரிழப்பு

குளித்துக் கொண்டிருக்கும்போது, ஆழமான பகுதியில் இவர்கள் இறங்கிவிட்டனர். இதனையடுத்து, இவர்கள் நீரில் தத்தளித்து கத்தி கூச்சலிட்டனர்.

இவர்களின் சத்தம் கேட்டு, கிராம மக்கள் ஓடி வந்து ஆற்றில் மூழ்கிய 7 பேரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், இவர்கள் 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.5 லட்சம் நிதியுதவி

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

இந்நிலையில், கடலூர் ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.