தாண்டவமாடும் பசி; உணவுக்காக வனவிலங்குகளைக் கொல்ல முடிவு - எங்கு தெரியுமா?
வனவிலங்களைக் கொல்ல நமீபியா அரசு முடிவு செய்துள்ளது.
கடும் வறட்சி
தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பசி, பட்டினி அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில், அங்கு பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்கக் காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு முடிவு
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 83 யானைகள் உள்ளிட்ட 723 காட்டு விலங்குகளை கொல்லும் திட்டம் மிகவும் தற்போது அவசியம் என்று நமீபியா சுற்றுச்சூழல், காடுகள், சுற்றுலாத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யானைகள் தவிர 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள், 100 எலாண்ட்ஸ் மான் வகை ஆகியவற்றைக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இதுவரை 157 விலங்குகள் வேட்டையாடப்பட்டிருப்பதாகவும்,
அவற்றிலிருந்து 9,56,875 கிலோகிராம் இறைச்சி எடுக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமீபியாவைத் தவிர, ஜிம்பாப்வே, ஜாம்பியா மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பசி நெருக்கடியைப் பேரழிவு நிலை என்று அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.