பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு - 1 கிட்னிக்கு இவ்வளவா? விசாரணையில் ஷாக்!
சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்னி திருட்டு
நாமக்கல், பள்ளிப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான் வசிக்கின்றனர்.
இவர்களை குறிவைத்து, அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் சட்டவிரோதமாகப் பெறப்பட்டு விற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரத்தைப் பெற, மோசடி கும்பல் போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு அங்கீகாரக் குழுவை ஏமாற்றியுள்ளனர்.
அதிர்ச்சி தகவல்கள்
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, தமிழ்நாடு மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் நான்கு பேர் கொண்ட தனிக்குழுவை அரசு அமைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த மோசடி நடந்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிபாளையத்தை சேர்ந்த கவுசல்யா என்ற பெண், புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும்,
அதற்காக தனக்கு ரூ.6 லட்சம் தந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் புரோக்கர் ஆனந்தன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பள்ளிப்பாளையத்தில் மட்டும் 6 பெண்கள் சிறுநீரகத்தை விற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.