நாகை எம்.பி தோழர் எம்.செல்வராசு இன்று காலை காலமானார் - யார் இவர்?
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். எம் செல்வராசு இன்று அதிகாலை காலமானார்.
எம். செல்வராசு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்த இவர் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1957 மார்ச் 16 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தின் நீடாமங்கலம் அருகே இருக்கும் கப்பலுடையான் என்ற கிராமத்தில் முனியன் - குஞ்சம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தவர் எம். செல்வராசு.
சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு பணியாற்றி வந்த தோழர் எம்.செல்வராசு திருவாரூர் திரு வி க அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினராக, துணைச் செயலாளராக, செயலாளராக, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக வளர்ந்து பின்னர் மாநிலக் குழு உறுப்பினர் முதல் தேசியக் குழு உறுப்பினர் வரை தனது அரசியல் பணியை தொடர்ந்தார்.
மக்களவை உறுப்பினர்
1989 ஆம் ஆண்டு முதல் முறை நாடாளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றவர் அதனை தொடர்ந்து 1996,1998, 2019 ஆகிய தேர்தலிலும் நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ளார்.
கமலவதனம் என்பவரை திருமணம் செய்து கொண்ட தோழர் எம்.செல்வராசுவிற்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரு மகள்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1989-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 110 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலிப் போராட்டத்தில் முன்னின்று நடத்தியவர் எம்.செல்வராசு.
உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை 02.40 மணிக்கு இயற்கை எய்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் காலமானதற்கு கட்சி பேதமின்றி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.