விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக ஆதரவை நோக்கி நகரும் நா.த.க?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
நாம் தமிழர்
நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்ததை தொடர்ந்து அவர்களின் வாக்கை கவர பல கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில், வன்னியர் வாக்குகள் விழுப்புரம் பகுதிகளில் அதிகமென்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நேரடியாக பாமக வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அதிமுக நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதிகாரபூர்வ தகவல் இல்லை. இருப்பினும் அரசியல் களத்தில் தீவிரமாக இது குறித்து பேசப்பட்டது. இந்த சூழலில் தான், பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறியதை அதிமுகவின் சிறப்பான நடவடிக்கை என வரவேற்றார் சீமான்.
அதே போல நேற்றும், அதிமுகவின் பட்டினி போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி நேரிலும் ஆதரவினை அளித்திருந்தது. அதனை தொடர்ந்தே தற்போது அதிமுக ஆதரவு வாக்குகளை நாம் தமிழர் கட்சி கவர நினைக்கிறதா? என்ற கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளது.
அதிமுக வெளிப்படையாக ஆதரவினை தெரிவிக்காது என்ற போதிலும், கட்சி தரப்பில் இருந்து ஏதேனும் ஒரு மறைமுக நடவடிக்கை வெளிப்படுமா? அல்லது எடப்பாடியார் அமைதியாக நகர்ந்து விடுவாரா? என்பதை பொறுத்திருத்த தான் பார்க்கவேண்டும்.