அமைச்சர் வீட்டருகே பயங்கரம் - நடைப்பயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை
மதுரை மாநகர் செல்லூர் 60 அடி ரோடு, ராமச்சந்திரன் காம்பவுண்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குதொகுதி துணைச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் வல்லபாய் சாலை பகுதியில் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து ஆயுதங்களால் வெட்டியது. இதிலிருந்து தப்பித்து அவர் ஓட முயற்சித்தபோதும் விரட்டிச்சென்று வெட்டி படுகொலை செய்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்ரமணியன் உயிரிழந்துள்ளார்.
விசாரணை
தகவலறிந்த தல்லாகுளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்ரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரடியாக சென்று விசாரணை நடத்துகிறார்.
கொல்லப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் தான் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வீடு அமைந்துள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.