புடவை கட்டினால் கேன்சர் வரும்? வைரலாகும் தகவல் - உண்மை என்ன?
புடவை கட்டுவதால் கேன்சர் வரும் என்ற தகவல் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
புற்றுநோய் பாதிப்பு
இந்தியாவில் புற்றுநோய் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியாகி அதிர்ச்சி அளித்தது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் என காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், புடவை கட்டினால் கேன்சர் ஏற்படும் என புதிய தகவல் ஒன்று இணையத்தை வலம் வருகிறது.
புடவை காரணமா?
இச்செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் தென் மாநிலங்களில் பெருவாரியான பெண்கள் புடவையைதான் அன்றாட ஆடையாக அணிகின்றனர். இந்நிலையில், கேன்சர் என்பது க்ரானிக் இன்ஃப்ளமேஷனால் உருவாகும். நாள்பட்ட காயம் இருக்கும் போது கேன்சர் உருவாக வாய்ப்புள்ளது.
உணவுக் குழாயில் நெடுநாட்களாக புண் இருந்தால் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது. புடவை, வேட்டி போன்ற ஆடைகளை இடுப்பைச் சுற்றி மிக இறுக்கமாக அணிவதால், அப்பகுதியில் இருக்கும் தோலின் தன்மை சிலருக்கு மாறுபட்டு காட்சியளிக்கும். அந்த இடத்தில் ஒருவேளை புண் ஏற்பட்டு அதனை நீண்ட நாட்களாக கவனிக்காமல் இருந்தால்,
மார்ஜுலின் அல்சர் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த வகையான கேன்சர் அப்பகுதில் வருவதற்கு மிக அரிதான சாத்தியக் கூறுகள் இருக்கிறது. ஆனால், புடவை கட்டினாலே கேன்சர் வரும் என பரவும் செய்தியைக் கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.