மக்களவை தேர்தல்: மைசூரு மன்னருக்கு சொந்த வீடு, கார் இல்லையா? வெளியான சொத்து மதிப்பு!
மைசூரு மன்னர் யதுவீர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு சொந்த வீடு, விவசாய நிலம், கார் இல்லை என தெரிவித்துள்ளார்.
மன்னர் யதுவீர்
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் 28 மக்களவை தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் மன்னர் யதுவீர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு சொந்த வீடு, விவசாய நிலம், கார் இல்லை என தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள குடகு மக்களவை தொகுதியில் மைசூர் மன்னர் யதுவீர் போட்டியிடுகிறார். இதற்காக மைசூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, டம்மி வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.
சொத்து விவரங்கள்
அந்த வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில், தனது சொத்து மதிப்பு ரூ.4 கோடியே, 99 லட்சத்து 59 ஆயிரத்து 303 என குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் கையிருப்பாக ரூ.1 லட்சம் உள்ளது.
தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் இருப்பு உள்ளது. ரூ. 1 கோடி மதிப்பிலான பங்குகள், நிறுவனங்களின் பத்திரங்கள் இருப்பதாக மன்னர் யதுவீர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னிடம் 4 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும், அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மன்னராக இருந்தாலும் தனக்கு சொந்தமாக வீடு, விவசாய நிலம், கார், வணிக கட்டிடங்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.