மக்களவை தேர்தலில் போட்டியிடும் மைசூரு மகாராஜா - கவனம் ஈர்க்கும் மைசூரு வேட்பாளர்..!
தேர்தலில் மக்களுக்கு மிகவும் பரிட்சயமான, தெரிந்த முகங்களை நிறுத்தினால் வாக்குகளை எளிதில் பெற்றுவிட முடியும்.
வேட்பாளர்கள்
அப்படி தான் பல சினிமா பிரபலங்களும் இந்தியாவை தாண்டி பல நாடுகளில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். சினிமா பிரபலங்களை தாண்டி, விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அந்த வரிசையில் தான், தற்போது மைசூரு தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் மைசூரு மகாராஜா. மன்னர் ஆட்சி காலம் முடிவடைந்து நாட்டில் மக்களாட்சி வந்துவிட்ட நிலையில், ராஜாவும் தேர்தலில் போட்டியிட வந்துவிட்டார்.
மைசூரு ராஜா
யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் என்ற 32 வயதானவர் தான் தற்போது மைசூரு தொகுதியில் போட்டியிடுகிறார். வாடியார் வம்சத்தினர் 1399 முதல் 1947 வரை மைசூரு சமஸ்தானத்தை ஆட்சி செய்தனர்.
மைசூர் நகரை கடைசியாக ஆட்சி செய்த 25வது ஜெயராமச்சந்திர வாடியாரின் பேரன் ஆவார் யதுவீர். ஜெயராமச்சந்திர வாடியார் மைசூருவை 1940 முதல் 1947 வரை ஆட்சி செய்த நிலையில், 1950 வரை மைசூரின் மன்னராகத் தொடர்ந்தார்.
இவரின் மூத்த மகளான காயத்ரி தேவியின் பேரன் தான் யதுவீர் வாடியார். பெங்களூருவில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் அமெரிக்காவில் உயர்கல்வியை முடித்துள்ளார் யதுவீர். தேர்தலில் இவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். 2015 ஆம் ஆண்டில் மைசூர் அரச குடும்பத்தின் தலைவராக, வாடியார் வம்சத்தின் 27 வது 'ராஜாவாக முடிசூட்டப்பட்டார் யதுவீர் வாடியார்.
ராஜஸ்தானின் துங்கர்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரி வாடியாரை என்பவரை யதுவீர் மணந்தார். திரிஷிகாவின் தந்தையான ஹர்ஷவர்தன் சிங் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.