திடீரென மருத்துவமனையில் குவிந்த 1000+ பேர் - மாரடைப்பால் அச்சம்
சில வாரங்களில் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
மாரடைப்பு அச்சம்
கர்நாடகாவில் திடீரென மாரடைப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள ஹசன் மாவட்டத்தில் சில வாரங்களில் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி இதற்குக் காரணமாக இருக்கலாம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் மைசூரில் உள்ள பிரபலமான ஜெயதேவா மருத்துவமனைக்குத் திடீரென ஒரே நேரத்தில் பல நூறு பேர் இதயப் பரிசோதனைக்காகப் படையெடுத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மருத்துவமனையின் டாக்டர் கே.எஸ். சதானந்தா, "ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியடைந்து மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர்.
மருத்துவர் விளக்கம்
மருத்துவமனையில் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வதால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. அதேநேரம் டெஸ்ட் செய்து ஆபத்தைத் தெரிந்து கொள்வது முக்கியம். அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் மக்கள் இதயப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பரிசோதனை பிரச்சனையைத் தெரிந்து கொள்ள உதவும் என்றாலும் எதிர்காலப் பிரச்சனைகளைத் தடுக்க முடியாது. வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை; நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்கச் சீரான உடற்பயிற்சி அவசியம். எல்லாரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்குப் படையெடுத்தால்,
ஏற்கனவே இருக்கும் இதய நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும். எனவே, மக்கள் ரொம்ப பயப்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 40 நாட்களில் ஹசனில் 23 மாரடைப்பு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.