குட்டிச்சாத்தான்களின் நடமாட்டம்? 12 நாட்களாக தொடரும் மர்மம் - அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!
கிராமத்தில் இரவு நேரத்தில் திடிரென கற்கள் வீடுகள் மீது வீசப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குட்டிச்சாத்தான்?
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஒட்டபாளையம் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக இரவு நேரத்தில் 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து அங்குள்ள வீட்டின் மேல் பகுதியில் கற்கள் விழுந்துள்ளது. இதனை குட்டிச்சாத்தான் கற்களை வீசுவதாக வதந்தி பரவியது.
இதனால் அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர் வரை இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை எனக்கூறுகின்றனர். இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடரும் மர்மம்
இதையடுத்து அவர்கள் அருகில் இருந்த கருப்பராயன் கோயிலில் இரவில் தஞ்சமடைந்து, சிறப்பு பூஜை நடத்தினர். இது தொடர்பாக காங்கேயம் காவல்துறையில் புகார் கொடுத்தும் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்த வேளையிலும் தொடர்ச்சியாக கற்கள் வந்து விழுவதாக சொல்லப்படுகிறது.
கற்கள் விழும்போது, இதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரோந்து சென்று பார்த்துள்ளனர். அப்போதும் கற்கள் எங்கிருந்து வருகின்றது என்பதே தெரியவில்லையாம். புகாரின் பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கிரேன் உதவியுடனும், டிரோன் கேமரா மூலமாகவும் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்ட சேதம் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கயம் தாசில்தார் மயில்சாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.