ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் - சந்திராயன் 3ன் பாகமா?
ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம பொருள்
ஆஸ்திரேலியாவின் மேற்கில் ஜீரியன் விரிகுடா பகுதிக்கு அருகே உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது. அது பெரிய அளவிலான உலோக பொருளின் பாகம் போல உள்ளது. மேலும், இது 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்த அபாயகராமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு மக்களை அறிவுறுத்தினர். இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறுகையில், "மத்திய மேற்கு கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்" என்று கூறியுள்ளனர்.
தீவிர விசாரணை
இதனை தொடர்ந்து, விண்வெளி நிறுவனம், "மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
மேலும், இது சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.