திருவிழா கூட்டத்தில் கொடூரத் தாக்குதல் - குழந்தைகள் உட்பட 40 பேர் பலி!
குண்டுவீசி ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணுவ தாக்குதல்
கடந்த 2021-ம் ஆண்டு மியான்மரில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், மத்திய மியான்மரின் சாங் யூ நகரில் புத்த மத திருவிழாவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
40 பேர் பலி
அப்போது, மியான்மர் ராணுவத்தினர் பாராகிளிட்டர் மூலம் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குழந்தைகள் உள்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், 80 -க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் மக்கள் அங்கிருந்து ஓடியதால் பலர் உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், இதில் சிதறிய உடல் பாகங்களை தற்போது வரை சேகரித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.