'கண்டா வரச் சொல்லுங்க'; போஸ்டர் ஒட்டுனது யாருன்னு தெரியும் - முத்தரசன் காட்டம்!
'கண்டா வரச் சொல்லுங்க' என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
போஸ்டர் சர்ச்சை
திருவாரூர் தனியார் கூட்டரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் மாவட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
முத்தரசன் காட்டம்
இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "தமிழகம் முழுவதும் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள். யார் இந்த போஸ்டர்களை ஒட்டுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டுகிற ஒரு நபர் யார் என்பதை பகிரங்கமாக சொல்ல முடியாத அவலநிலைக்கு இந்த கட்சிகள் எல்லாம் ஆளாகி இருக்கின்றன.
குற்றசாட்டுகள் முன்வைக்க வேண்டுமென்றால் நாங்கள் பகிரங்கமாக சொல்வோம். ஆனால், அந்த முதுகெலும்பு இல்லாதவர்கள் இப்படி வால் போஸ்டர்களை ஒட்டுகிறார்கள். இந்த வால்போஸ்டர்கள் எங்களை ஒன்றும் செய்யாது. இந்த வால்போஸ்டர்கள் கழுதைக்கு நல்ல தீனி அவ்வளவுதான், அதுக்கு மேல் ஒன்றும் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.