மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா?
முஸ்லிம் பெண் மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து வருவது கவனம் பெற்றுள்ளது.
கவி சித்தேஸ்வரா
கர்நாடகா, டவுனில் கவி சித்தேஸ்வரா மடம் உள்ளது. இந்த மடத்தின் ஆண்டு திருவிழா தெற்கின் கும்பமேளா என கூறப்படும் அளவிற்கு பிரபலம்.
இந்நிலையில் குடாரி மோதியில் வசிக்கும் ஹசீனா பேகம் என்னும் முஸ்லீம் பெண் மடத்தில் உள்ள நாகதேவர் சிலை முன் அமர்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்து வருகிறார். முதல் முறையாக முஸ்லிம் பெண் வந்து தியானம் செய்து வருவது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முஸ்லிம் பெண் தியானம்
இதுகுறித்து அவர் பேசுகையில், ”மன அமைதிக்காக கவி சித்தேஸ்வரா மடத்திற்கு வந்து தியானம் செய்து வருகிறேன். 11 நாட்கள் நான் இந்த தியானம் மேற்கொள்ள உள்ளேன். எனது மனம் நிம்மதி இல்லாமல் இருந்தது. இதனால் எனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணர்ந்தேன்.
அதனால் மடத்தின் சுவாமியிடம் கேட்டு தியானம் செய்து வருகிறேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் அனைத்து மதங்களும் ஒன்று தான். கடந்த 13 ஆண்டுகளாக நான் இந்த மடத்திற்கு வந்து செல்கிறேன். முஸ்லிம் என்பதால் என்னிடம் இந்த மடத்தில் எந்த பாகுபாடும் காட்டவில்லை.
ஒருவரின் செயலால் எனது மனது புண்பட்டுள்ளது. அதனால் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து வருகிறேன். இந்த தியானத்தால் எனது மனது அமைதி பெற்று வருகிறது. எனது குழந்தைகளுக்கும் மடாதிபதியின் ஆசி உள்ளது. நான் நாகப்பாவையும், பசவண்ணரையும் நினைத்து தியானம் செய்கிறேன். என் மனம் முழுஅமைதி பெறும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.