மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி - சுவாரஸ்ய பின்னணி
இஸ்லாமிய தம்பதி தங்கள் குழந்தைக்கு மகாலட்சுமி என ஹிந்து கடவுள் பெயர் சூட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோலாப்பூர்- மும்பை
இந்தியாவின் கோலாப்பூர்- மும்பை செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 6- ஆம் தேதி 31 வயதான பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் தன் கணவர் தய்யாப் உடன் பயணம் மேற்கொண்டார். இரவு 11 மணியளவில் ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்ற பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த பெண் பயணிகள் பாத்திமாவுக்கு உதவி செய்துள்ளனர். அங்கேயே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த ரெயில்வே போலீசார், தாய் மற்றும் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பெண் குழந்தை
இந்நிலையில், மகாலஷ்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘மகாலஷ்சுமி’ என்று பெயரையே பெற்றோர் சூட்டியுள்ளனர்.
இஸ்லாமிய குழந்தைக்கு ‘மஹாலட்சுமி என இந்து கடவுளின் பெயரை வைத்தது குறித்து தந்தை தய்யாப் கூறுகையில், “என்ஜின் கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டது. இரவு 11 மணியளவில் மீண்டும் ரயில் இயங்க துவங்கியதும், என் மனைவி வயிற்று வலி இருப்பதாக கூறி, கழிவறைக்கு சென்றார்.
மகாலஷ்சுமி
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், தேடி சென்று பார்த்த போது, பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த பெண் பயணிகள் எங்களுக்கு உதவி செய்தனர். இதனையடுத்து எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
திருப்பதியில் இருந்து கோலாப்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்ற சக பயணிகள், இந்த ரயிலில் எனது மகள் பிறந்தது மகாலட்சுமி அம்மனை தரிசனம் செய்தது போல் உள்ளது என்று கூறினர். அதனால் குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயர் சூட்டினேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.