முருகனின் அறுபடை வீட்டிற்கு இலவச சுற்றுலா போகணுமா? இதோ அசத்தல் சான்ஸ்!
அறுபடை வீடு இலவச ஆன்மீக பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறுபடை வீடு
சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் இதுவரை 1.822 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு. குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் அறநிலையத்துறை சார்பாக வழங்கப்படுகின்றன.
இலவச ஆன்மீக பயணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024 2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பக்தரின் ஆண்ட வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும். ஒரு முறை மட்டுமே இந்த பயணத்தில் கலந்து கொள்ள முடியும்.
அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் அனைத்தையும் பக்தர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை. இதற்கான விண்ணப்பத்தை www.hrce.tn.gov.in என்ற இந்து அறிநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்யலாம்.