திருப்பதியில் சொகுசு ஹோட்டல் விவகாரம் - அர்ச்சகர்கள் உண்ணாவிரதம்!
ஹோட்டல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அர்ச்சகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மும்தாஜ் ஹோட்டல்
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தேவலோகம் என்ற திட்டத்துக்காக திருப்பதி திருமலையில் அலிபிரி அருகே 20 ஏக்கர் அரசு நிலம் சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து அடுத்து வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சிக் காலத்தில் அந்த இடத்தில் மும்தாஜ் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. 2021 முதல் 94 ஆண்டுகளுக்கு இந்த நிலம் குத்தகைக்கும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து மொத்தமாக 250 கோடி ரூபாய் செலவில் மதுக்கூடம், ரெஸ்டாரன்ட், நீச்சல் குளம் உள்ளிட்ட பல சொகுசு வசதிகளுடன் இந்த ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. 2027ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள் போராட்டம்
இந்நிலையில், மும்தாஜ் ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, நிலத்தை கோவில் நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திருமலை கோவில் அர்ச்சகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள திருப்பதி திருமலை தேவசம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, ''திருப்பதி பாலாஜி கோவிலுக்கு செல்லும் பாதையில் மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் இருந்தால், ஹிந்துக்களின் உணர்வு புண்படும். கோவிலுக்கு அருகில் இந்த ஹோட்டல் அமைவதால் ஹிந்துக்கள் இதை ஏற்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.