நிஜ கஜினி; கொலையானவரின் உடலில் இருந்த பெயர்கள் - டாட்டூ மூலம் சிக்கிய குற்றவாளிகள்
கொலை செய்யப்பட்டவரின் உடலில் குத்தப்பட்ட டாட்டூ மூலம் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாட்டூ
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் குரு சித்தப்பா வாக்மாரே. தகவல் அறியும் உரிமை ஆர்வலர் என்று கூறிக்கொள்ளும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த ஜூலை 24 ம் தேதி மும்பையின் வோர்லியில் உள்ள ஸ்பாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை குறித்து விசாரிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது அவரின் தொடையில் 22 பெயர்கள் டாட்டூ குத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் பின் அந்த பெயர்களை வைத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
விசாரணை
இதில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேக்கர் பெயரும் இருந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய போது, குரு வாக்மாரே தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக மும்பையில் மற்றோரு பகுதியில் ஸ்பா நடத்தி வரும் முகமது அன்ஸாரி என்பவரை தொடர்பு கொண்டு குருவை கொலை செய்ய 6 லட்சம் கொடுத்துள்ளார்.
குரு வாக்மரே அளித்த புகாரின் காரணமாக முகமது பெரோஸ் அன்சாரிக்கு சொந்தமான ஸ்பா கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பலை வைத்து குரு வாக்மரேவை கொலை செய்துள்ளனர். தன் பிறந்தநாளன்று 21 வயது காதலியுடன் பீர் பார்ட்டியை முடித்து விட்டு ஸ்பாக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது காதலியை மற்றோரு அறையில் அடைத்து விட்டு குரு வாக்மரே கத்தரிக்கோல் வைத்து கழுத்தை அறுத்தும், கத்தியால் வயிற்றில் குத்தியும் கொலை செய்துள்ளனர். தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் குரு வாக்மரேவின் காதலிக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.