TNPL தொடரில் இடம் கிடைக்காத விரக்தி - மேம்பாலத்தில் இருந்து குதித்து கிரிக்கெட் வீரர் விபரீத முடிவு
TNPL தொடரில் இடம் கிடைக்காததால் தமிழக வீரர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு இரு சக்கர வாகனத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு பாலத்திலிருந்து திடீரென கீழே குதித்தார். சுமார் 30 அடி உயரத்திலிருந்து குதித்ததால் பலத்த காயமடைந்தார்.
இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணை
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அந்த இளைஞர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரின் தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் (23) என்பது தெரியவந்தது. பி.காம் முடித்துள்ள அவர், பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடருக்குத் தயாராகி உள்ளார். 2 ஆண்டுகளாக தேர்வாகாத நிலையில், மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனாலே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.