18,000 குழந்தைகள்; மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் செய்த செயல் - அசந்து போன வான்கடே!
18,000 குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் வீர்ரகள் மைதானத்தை சுற்றி வந்து அவர்களுக்கு நன்றி கூறினர்.
மும்பை வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 235 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை அணி.
குழந்தைகள் மகிழ்ச்சி
இந்நிலையில் அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு என்ற பெயரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில், மும்பை அணி ஆடும் ஒரு போட்டியை காண ஆயிரக்கணக்கில் பள்ளிக் குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர்.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியை காண 18,000 குழந்தைகள், மும்பை அணி உரிமையாளர் நீதா அம்பானி சார்பில் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மும்பை அணியின் உடையணிந்து அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அப்போது தங்களை ஆதரித்த 18,000 குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், மும்பை அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து அவர்களுக்கு நன்றி கூறினர். இந்த காட்சி மைதானத்தில் இருந்தவர்களையும், இதனை பார்த்தவர்களையும் நெகிழ வைத்தது.