ஹர்திக் மீது எந்த தவறும் இல்லை.. அவர்கள் செய்தது தான் தவறு - சொன்னது யார் தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
ஹர்திக் - ரோஹித்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் சாதாரண வீரராக அவர் விளையாடி வருகிறார்.
தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. மேலும், ரோஹித் - பாண்டியா இடையில் ஒவ்வொரு போட்டியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பாண்டியா மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் ரசிகர்களுக்கு உடன்பாடில்லை. அவர் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் அதிருப்தி ஒளியை எழுப்பி வருகின்றனர்.
கங்குலி ஆதரவு
இந்நிலையில், ஹர்திக் மீது எந்த தவறும் இல்லை என அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அவர் கூறுகையில் "மைதானங்களில் ரசிகர்கள் ஹர்திக்கிற்கு எதிராக அதிருப்தி ஒலி எழுப்புவதை நிறுத்த வேண்டும்.
அது தவறான செயல். அணி நிர்வாகம்தான் அவரை கேப்டனாக நியமித்திருக்கிறது. விளையாட்டுகளில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். நீங்கள் இந்திய அணிக்காக ஆடினாலும் சரி, ஐ.பி.எல் அணிக்கு ஆடினாலும் சரி ஒரு நிர்வாகம்தான் உங்களை கேப்டனாக நியமிக்கும். ரோஹித் ஷர்மா ஒருவிதமான க்ளாஸான வீரர்.
ஒரு வீரராகவும் கேப்டனாகவும் மும்பை அணிக்காகவும் சரி, இந்திய அணிக்காகவும் சரி, அவரின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்திருக்கிறது. அதற்காக ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தி ஒலியை எழுப்ப முடியாது. இது அவருடைய தவறு கிடையாது. ஒரு நிர்வாகத்தால்தான் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.