இனி சென்னை பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு சிக்னல் பிரச்சினை இல்லை - அரசின் அசத்தல் திட்டம்
பேருந்து சிக்னல் முன்னுரிமை திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்த உள்ளது.
MTC பேருந்து
சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ என பல்வேறு வகையான பொது போக்குவரத்துகள் இருந்தாலும், பேருந்துகள் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைப்பதால் பெரும்பாலான மக்கள் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பயணத்தை தாமதப்படுத்துவது மட்டும் இல்லாமல், டிராபிக் சிக்னல்களும் பயணத்தை தாமதப்படுத்துகிறது. மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சிக்கல் இல்லை.
பேருந்து சிக்னல் முன்னுரிமை
தற்போது மாநகர பேருந்தும் டிராபிக் சிக்னல்களில் குறைந்த நேரம் மட்டுமே நிற்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பயண நேரம் குறைப்பு , பயண அட்டவணை நம்பகத்தன்மை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் ஆகியவற்றை இலக்காக கொண்டு பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் என்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுப்போக்குவரத்தை அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் படி பஸ் சிக்னல் முன்னுரிமை அமைப்பு, நிகழ்நேரத் தரவு அடிப்படையில் மாநகர பேருந்தை கண்டறிந்து சிவப்பு சிக்னலின் கால அளவைக் குறைக்கும், சிக்னல் அருகே மாநகர பேருந்துகள் இருக்கும்போது பச்சை விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
2025 ஜனவரி
சென்னை ஐஐடி மற்றும் திருவனந்தபுரம் CDAC இணைந்து இந்த திட்டத்தை முன்மொழிந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சோதனை ஓட்ட அடிப்படையில் GST சாலையில், ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாநகர பேருந்துகளில் GPS கருவிகள் பொருத்தும் பணியும், முக்கிய சிக்னல் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், 2025 ஜனவரி இறுதிக்குள் இத்திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.