IPL தொடரில் முடிவை அறிவிக்கும் தோனி? ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு!
தோனியின் ஃபேஸ்புக் பதிவு ரசிகர்களிடையே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தோனி
தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நாளை மதியம் 2 மணிக்கு நேரலையில் வரப்போவதாக கூறியுள்ளார். அப்போது, ரசிகர்களுடன் மிக முக்கியமான தகவலை பகிர்ந்து கொள்ளப் போவதாக தோனி தெரிவித்திருக்கிறார்.

ஐ.பி.எல். உள்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 41 வயதாகும் தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
ஃபேஸ்புக் பதிவு
அதனைத் தொடர்ந்து, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது தோனியின் ஃபேஸ்புக் பதிவு ரசிகர்களை பல்வேறு விதமாக யோசிக்க வைத்துள்ளது. சினிமாத்துறையில் தோனி நுழையப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவின.

அதுதொடர்பாக ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதற்கு முன்னதாக தனது கடைசி IPL போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாட விரும்புவதாக தோனி தெளிவுபடுத்தி இருந்தார்.
இது குறித்து அவர் பேசும் போது, ‘எனது கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். இது அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடங்கள் கழித்தா என்பது எங்களுக்கு தெரியாது’ என்று ஒரு CSK நிகழ்வின் போது எம்எஸ் தோனி விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.