இலவசங்களும், நலத்திட்டங்களும் ஒன்றல்ல - பாஜகவிற்கு கனிமொழி பதிலடி!
நலத்திட்டங்களும் இலவசங்களும் ஒன்றல்ல வேறு என்று திமுக லோக்சபா உறுப்பினரான கனிமொழி பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக அரசு அறிவித்த தேவையில்லாத இலவசங்களால் தமிழத்தின் நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
திமுக அறிவித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், பாதிக்கும் மேற்பட்டவை தேவையில்லாத இலவசங்கள் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிர் அணி தலைவியும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறியதாவது,
கனிமொழி பதிலடி
நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.
அந்த இலவச மின்சாரம் இல்லையென்றால் இன்று பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இலவச கல்வி, இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
அரசாங்கம் என்பது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பது, அவர்களை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.