பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 63 ஆயிரம் கோடி எங்கே ? நிதியமைச்சருக்கு கேள்வியெழுப்பிய தயாநிதி!
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டமானது மாநில அரசின் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக அறிவித்த நிலையில் இன்றுவரை அத்திட்டத்திற்கென ஒரு ரூபாய்கூட விடுவிக்காமல் இழுத்தடிப்பதாக சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கென விநியோகிக்க ஒப்புதல் அளித்த நிதியின் தற்போதைய நிலை? கடந்த மூன்று ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான நிதியை வழங்க அனுமதிப்பதிலும், நிலுவையில் உள்ள தொகையினை விடுவிப்பதிலும் ஏற்படுகின்ற தாமதத்திற்கான காரணங்கள்?
மேலும் அவற்றை சரிசெய்து அதன் செயல்முறைகளை விரைவுபடுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்?, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான (Phase II) நிதி வேண்டி தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக அனுப்பிய கடிதங்களுக்கு மத்திய அரசு அளித்த பதில்கள் என்ன?, மேலும் அத்திட்டத்திற்கு உடனடியாக நிதி வழங்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
நிர்மலா சீதாராமன்
மேலும் கடந்த ஐந்தாண்டுகளில், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு என அனுமதி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை மாவட்டம், மாநிலம் மற்றும் ஆண்டுவாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டோகன் சாஹூ அளித்த பதிலில் “சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்டுள்ள 118.9 கி.மீ கொண்ட வழித்தடத்திற்காக கணக்கிடப்பட்ட திட்ட மதிப்பு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய்.
இது போன்ற அதிக மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு அத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி இருப்பின் தன்மையைப் பொறுத்தே ஒப்புதல் வழங்கப்படும்.
மேலும் தற்போது சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டமானது மாநில அரசின் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
எனவே அத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான செலவினத்தை தமிழ்நாடு அரசே தற்போது செலவழித்து வருகிறது.” இவ்வாறு கூறப்பட்டுள்ள மத்திய அரசின் பதில் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தார்.
அவ்வாறு அறிவித்துவிட்டு இன்றுவரை அத்திட்டத்திற்கென ஒரு ரூபாய்கூட விடுவிக்காமல் இழுத்தடிப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசு வஞ்சிப்பது தெளிவாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.