முதல்வராக பதவியேற்ற உடனே... இறைச்சி கடை, வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு!
இறைச்சி மற்றும் முட்டைகளை திறந்த வெளியில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மோகன் யாதவ்
மத்திய பிரதேசம், புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் போபாலில் உள்ள மோதிலால் நேரு மைதானத்தில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மங்குபாய் சி.படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தொடர்ந்து, துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
திறந்தவெளி விற்பனை
இந்நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் பேசிய முதல்வர் மோகன் யாதவ், ``திறந்தவெளியில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடைவிதிக்கப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, இந்தத் தடை விதிக்கப்படுகிறது.
இது குறித்து மக்கள் மத்தியில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்பினரும், போலீஸாரும் டிசம்பர் 15-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்குச் செல்பவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்போம்.
அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இருக்கும் ஒலிபெருக்கிகள் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்ய, பறக்கும்படை ஒன்று அமைக்கப்படும். அதோடு ஒலிபெருக்கிகள் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் செயல்படுகின்றனவா என்று ஆய்வுசெய்யப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக ஒலிபெருக்கி பயன்படுத்தத் தடைவிதிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.