காதலை கைவிடாத மகள்.. முட்டை பொரியலில் விஷம் கலந்த தாய் - பகீர் பின்னணி!
காதலைக் கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்துகொடுத்து தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டில் மல்லிகா என்பவர் தனது கணவர் மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த தாய் மல்லிகா மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிரம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுக் காதலித்து வருவதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட தாய் மல்லிகா அதிர்ச்சியடைந்து தனது மகளைக் கண்டித்துள்ளார்.
ஆனால் அந்த பெண் இளைஞருடன் பேசுவதைத் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா சம்பவத்தன்று முட்டை பொரியலில் எலி பேஸ்ட்டை கலந்து தனது மகளுக்குக் கொடுத்துள்ளார்.அதனைச் சாப்பிட்ட அவருடைய மகள் வாயில் நுரை தள்ளியுள்ளது.
முட்டை பொரியல்
அந்த சமயத்தில் உறவினர்கள் சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தாய் மல்லிகா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு கைது செய்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.