வேறு சாதி இளைஞருடன் காதல் - மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை முயற்சி!
மாற்று சமூக இளைஞரை காதலித்ததால், தாய் மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
நெல்லை, சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி. இவரது மனைவி ஆறுமுக கனி. இவர்களுக்கு அருணா (19) என்ற மகள் உள்ளார். அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஓட்டுனரான பேச்சி சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அருணா மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். குடும்பத்தில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவே தனது காதலை தாயிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே மகளை நெல்லைக்கு வருமாறு தாய் அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் வீட்டிற்கு சென்ற நிலையில்,
தாய் கொடூரம்
அவர் சமூகத்தையே சேர்ந்த வேறு ஒருவருக்கு திருமணம் முடிக்க முயற்சி நடந்துள்ளது. மேலும் பெண் பார்க்க வருவதாக தெரிவித்துள்ளனர். அதனால், தாய் மகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாப்பிள்ளையிடம் தனது காதலை கூறி காதலனுடன் சென்று விடுவேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாய் மகளை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதனையடுத்து, தானும் வீட்டில் இருந்த ஹேர் டை மற்றும் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த மகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.