கதவை உடைக்க வேண்டாம்; உள்ளே விஷவாயு - டோரில் எழுதி வைத்துவிட்டு உயிரைவிட்ட தாயும் மகனும்..
நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நஷ்டம்
தருமபுரி, நல்லம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல் (72). இவர் மனைவி சாந்தி ( 56). இவர்களின் மகன் விஜய் ஆனந்த் (35). விஜய் நண்பர்களுடன் இணைந்து ஈரோடு, நசியனூர் பகுதியில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்துள்ளார்.
தொடர்ந்து, ஏற்பட்ட தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்சினையால் மகன் மற்றூம் தாய் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனிவேல், பாலக்கோடு அருகில் உள்ள தங்களது விவசாய நிலத்தை பார்த்து வர சென்றுள்ளார்.
தற்கொலை
மாலையில் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அவர் மற்றொரு சாவி மூலம் வீட்டை திறந்ததில், வீட்டினுள் உள்ள அறை ஒன்றும் உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அதில் ஒரு தாள் ஒட்டப்பட்டிருந்துள்ளது.
அதில், 'அறைக்குள் நைட்ரஜன் கேஸ் உள்ளது. எனவே கதவை உடைத்து உள்ளே வரும் முன் காவல்துறைக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்புடன் நுழையவும்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் போலீஸாருக்கு தகவல் அளித்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.
அதனையடுத்த விசாரணையில், ஆன்லைன் மூலம் தகவல் திரட்டி, 2 நைட்ரஜன் கேஸ் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.