ஹவுஸ் ஓனர் செயல்; ரோட்டில் மகனுக்கு இறுதி சடங்கு செய்த தாய் - கள்ளச்சாராய விவகாரம்!
தாய் மகனுக்கு நடுரோட்டில் இறுதி சடங்கு செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராய விவகாரம்
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் பலியாகி உள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதனால் இன்னும் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் 21 பேரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறுதி சடங்கு
இதற்கிடையில், மோகன் - புஷ்பா தம்பதியின் மூத்த மகன் மனோஜ் குமார். பூக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மனோஜ் குமார் பலியானார். உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய வாடகை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
அப்போது வீட்டு உரிமையாளர் வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து புஷ்பா தனது உறவினர்களுடன் சேர்ந்து மகனின் உடலை நடுரோட்டில் வைத்து இறுதி சடங்கு செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.