பிள்ளைகள் படிப்பு செலவிற்காக பஸ்முன் பாய்ந்து உயிரைவிட்ட தாய் - சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
சேலத்தில் தாய் ஒருவர் தனது பிள்ளைகள் படிப்பு செலவிற்காக உயிரைவிட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தாய்
சேலம் மாவட்டம், முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது கணவரை பிரிந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவருமே கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இவர் கடந்த மாதம் 28-ம் தேதி அக்ரஹாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்து முன் பாய்ந்து உரிழந்தார்.
விசாரணையில் வெளியான தகவல்
இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் விபத்திற்கு தான் காரணம் இல்லை என்று தெரிவித்தார். பின்னர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பாப்பாத்தி திடீரென வேண்டுமென்றே பேருந்தின் முன்பக்கம் மோதுவது போல் நடந்தது தெரியவந்தது.
மேலும், விபத்தில் உயிரிழந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியதைக் கேட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக தாய் உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.